மதுரை : பனகல் சாலையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியை அதிமுக தொடர்ந்து மேற்கொள்ளும். சட்ட திட்டங்களுக்கு உபட்டு காவல்துறை அனுமதியோடு அதிமுக பிரச்சாரம் நடைபெறும்".
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்
"திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. அனைத்து கடன்களும் ரத்து எனவும், பயிர்க்கடன் தேசிய வங்கி கடன் ரத்து என பொய்யாக அறிவித்து ஆட்சிக்கு வந்தனர். திமுகவால் எங்கள் அட்சியை ஒரு குறையும் சொல்லமுடியவில்லை. அதனால் நிறைவேற்ற முடியாத கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து 350 கோடியில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளனர்".
மின்வெட்டுக்கு காரணம்
"கூட்டுறவு வங்கி கடன் ரத்து, மகளிருக்கு 1000 ரூபாய் நிதி, கல்விக்கடன் ரத்து, நீட்தேர்வு ரத்து என சொல்லிய திமுக ஆட்சியில் மின்சார வெட்டு உருவாகியுள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்பாக அணில் தான் மின்வெட்டுக்கு காரணம் எனக்கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர்".