தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு மேடையில் 80 விழுக்காடு... மற்றொரு மேடையில்  70 விழுக்காடு... முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்... - Modi

தமிழ்நாடு வாக்குறுதிகளை 80% தீர்த்துவிட்டதாக ஒரு மேடையில் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றொரு மேடையில் 70% என்கிறார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 10, 2022, 7:08 AM IST

Updated : Sep 10, 2022, 12:45 PM IST

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மதுரையின் மிகப் பழமை வாய்ந்த விக்டோரியா எட்வர்டு அரங்கில் தனி நபரின் ஆதிக்கத்தால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதற்காக குரல் கொடுத்தவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக தேர்தல் நடத்தி புதிய நிர்வாகம் உருவாகும்வரை அரசே இதனை ஏற்று நடத்த வேண்டும். நீண்ட காலம் உள்ள இந்த பிரச்சனையில் அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

இந்த வளாகத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளில் பெறப்படும் தொகை ஒன்றாகவும், கணக்கில் வரவு வைக்கின்ற தொகை ஒன்றாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொது பயன்பாட்டில் உள்ள இந்த அரங்கு, நூலகம் மற்றும் திரையரங்கை பார்வையிடக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அப்படி என்றால், ஏதோ தவறு நடக்கிறது என்று தானே பொருள்..? இந்த பிரச்சனையை இத்தோடு நாங்கள் விடுவதாக இல்லை.

மாறி மாறி பேசும் முதலமைச்சர்: மக்களுக்காக நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லக்கூடாது. அதனை தமிழ்நாட்டு மக்களும், எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளும்தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு வாக்குறுதிகளை 80% தீர்த்துவிட்டதாக ஒரு மேடையில் கூறும் முதலமைச்சர் மற்றொரு மேடையில் 70% என்கிறார். என்னைப் பொறுத்தவரை நான் கேட்பது நீங்கள் தீர்த்து வைத்த வாக்குறுதிகளில் 8% மட்டும் சொல்லுங்கள் என்கிறேன். அதற்கு பதில் இல்லை.

ரூ.1000 தரும் அரசே, கல்வியை இலவசமாக்கு:அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த மாணவிகள் எவ்வளவு கட்டணம் கட்டி அந்த கல்லூரிகளில் பயில்கிறார்கள்? அதற்கு அந்தக் கல்வியை தரமாக இலவசமாக தாருங்கள் என்கிறோம். இந்தத் திட்டத்திற்கு "புதுமைப்பெண்" என பெயர் வைத்துள்ளீர்கள். மாணவிகளை கையேந்த வைப்பது புதுமையல்ல. தானே கல்வி கற்று, அதற்குரிய வேலையைப் பெற்று யாரையும் சார்ந்திராமல் தனது சொந்தக் காலில் பெண்கள் நின்று வாழ்வதுதான் புதுமை. குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை என்று சொன்னார்கள்.

ரூ.696 கோடி எப்படி வந்தது..? பிறகு நிதி இல்லை என்று காரணம் சொல்லிவிட்டு, தற்போது மாணவிகளுக்கு வழங்குகிறார்கள். இதற்கு மட்டும் ரூ.696 கோடி எப்படி வந்தது..? எங்களுக்கு ரூ.1,000 கொடுங்கள் என்று எந்த மாணவியாவது கேட்டாரா..? இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு காஸ் சிலிண்டரை வாங்க இயலுமா? வெறும் ஆயிரம் ரூபாயைக் கொண்டு எந்தக் கல்லூரியில் மாணவிகள் தங்கள் கல்வியைப் பெற இயலும்..?

இவர்கள் நடத்துவது ஆட்சியே கிடையாது. அப்படியானால் 'திராவிட ஆட்சி' என்று கூறியிருக்க வேண்டும். 'திராவிட மாடல்' என்றுதான் சொல்கிறார். மாடல் எப்போதும் விளம்பரம் மட்டும்தான் செய்யும். ஷாருக்கான், சல்மான்கான், ஐஸ்வர்யாராய், தோனி ஆகியோரெல்லாம் திரையில் தோன்றி நடிக்கிறார்கள் என்றால் அது மாடல். பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டி விளம்பம்தான் செய்கிறார்களே ஒழிய, ஆட்சி எங்கே நடக்கிறது?

மோடியை எதிர்க்க ராகுல் காந்தியா..?கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ், அப்போதெல்லாம் ஏற்படுத்தாத ஒற்றுமையை ராகுல் தனது பாதயாத்திரை மூலம் இப்போது ஏற்படுத்தப் போகிறாரா..? இதெல்லாம் வேடிக்கையாகத் தெரியவில்லையா? காலையில் ஒன்னேகால் மணிநேரம், மாலை ஒன்னேகால் மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். இதில் என்ன தேச ஒற்றுமை ஏற்படும்..? மோடியை எதிர்த்து நாங்களெல்லாம் அரசியல் செய்யவில்லையா..? மோடியை எதிர்க்க ஆள் வேண்டும்தான். அதற்கு ராகுல் ஆள் கிடையாது. எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம்' என்றார்.

மதுரையில் சீமான் பேட்டி

இதையும் படிங்க: பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை

Last Updated : Sep 10, 2022, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details