தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

“இட ஒதுக்கீடு குறித்த எஸ்.பி.ஐ விளக்கம் திருப்தி அளிக்கவில்லை” - சு.வெங்கடேசன் எம்.பி., - ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் (ஊழியர் உறவு)

மதுரை : வங்கி எழுத்தர் பணி நியமனங்களில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீடு குறித்து பாரத ஸ்டேட் வங்கி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

By

Published : Dec 12, 2020, 3:59 PM IST

வங்கி எழுத்தர் பணிக்கான தொடக்க நிலைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் பட்டியலை எஸ்.பி.ஐ., வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த பட்டியல் தயாரிப்பில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீடு முரையாக பின்பற்றப்பட்டுள்ளதா என கேட்டு, கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் தால்வார் சந்த் கெலாட்டிற்கு சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அக்கடிதத்தை அமைச்சர் தால்வார் சந்த் கெலாட் நிதியமைச்சகத்திற்கு அனுப்பி, அது குறித்து விளக்கமளிக்க கோரியிருந்தார். அதை ஸ்டேட் வங்கி தலைவருக்கு அனுப்பிய மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், விளக்கம் கேட்ட சு. வெங்கடேசன் எம்.பி.,க்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து, ஸ்டேட் பாங்க் தலைமைப் பொது மேலாளர் (ஊழியர் உறவு) அதற்கு பதில் எழுதி இருந்தார்.

ஆனால், அதில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமானதாக இல்லை என கூறி மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஆகிய மூவருக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ வங்கி எழுத்தர் பணி நியமனம் தொடர்பாக ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் (ஊழியர் உறவு) அளித்துள்ள பதில் திருப்திகரமானதாக இல்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள பொதுப்பட்டியலில் எத்தனை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., இ.டபிள்யு.எஸ் பிரிவினர் இடம் பெற்றிருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை. இதன் மூலமாக, ஸ்டேட் வங்கி தந்துள்ள பதில் இட ஒதுக்கீட்டு கோட்பாடு இப்பட்டியல் தயாரிக்கப்படுவதில் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற எண்ணம் வலுபெறுகிறது.

பொதுப் பட்டியல் தயாரிக்கப்படும்போது எல்லாப் பிரிவு போட்டியாளர்களும் கணக்கில் கொள்ளப்பட்டு அதிக மதிப்பெண்கள் வரிசையில் அவர்களை அப்பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். பின்னர் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும். "பொது" என்பதையே ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., போன்று தனித் தொகுப்பாக அணுகுவது தவறு. இது பொதுப்பட்டியலிலும் இடம் பெறும் உரிமையை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரிடமிருந்து தட்டிப் பறிப்பது ஆகும்.

ஸ்டேட் வங்கியின் பதில் கடிதத்திலேயே ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை இறுதி தேர்வில்தான் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த தொடக்க நிலை தேர்வில் அந்த சலுகை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த விளக்கக் கடிதம்

இப்படிப்பட்ட நிலையில் பொது, ஓ.பி.சி., எஸ்.சி., பிரிவினருக்கு ஒரே கட் ஆஃப் மதிப்பெண் இருக்க வாய்ப்பே இல்லை. பொதுப் பட்டியல் என்பது இட ஒதுக்கீட்டு பிரிவினரை தவிர்த்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகவே இருக்க முடியும். இது முற்றிலும் விதி மீறல் ஆகும். தொடக்க நிலைத் தேர்வோ, இறுதித் தேர்வோ இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் இரண்டிற்கும் ஒன்றே; அவை மாற இயலாது.

மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதம்

ஆகவே, ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு அடிப்படை அம்சங்கள் கடைப் பிடிக்கப்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்கிறவரை பணி நியமனங்கள் அடுத்த கட்டம் நோக்கி நகராமல் இருக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். இப்பிரச்னையில் உடனடியாக உரிய தலையீட்டை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், ஸ்டேட் வங்கி தலைவரை வேண்டுகிறேன்” என அவர் கோரியுள்ளார்.

இதையும் படிங்க :ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details