மதுரை:(Judge warns Sattai Duraimurugan): சாட்டை துரைமுருகன் யூ-ட்யூபில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துகளைப் பேசியும் வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
நிபந்தனை ஜாமீன்
விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி, தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார்.
இதன்பேரில் மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வாக்குறுதியை மீறிய சாட்டை துரைமுருகன்
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இவர் மீது 5 வழக்கு உள்ளது. ஜாமீன் வாங்கிய வழக்குகளில் நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குறுதியை மீறி, அவதூறு கருத்துகளைத் தொடர்ந்து பேசி வருகிறார் எனக் கூறி, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர்.
சாட்டை துரைமுருகனை எச்சரித்த நீதிபதி
இதைப் படித்து பார்த்த நீதிபதி கோபமடைந்து, 'என்ன வார்த்தை பயன்படுத்தியுள்ளீர்கள்; என்ன வார்த்தை வேண்டுமானாலும் பேசலாமா?
யூ-ட்யூபை வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ‘என்ன வேண்டுமானாலும் பேசலாமா’ - இதுபோன்ற அவதூறான பேச்சுக்களை ஊக்கப்படுத்த முடியாது. அவர் பேசி உள்ள வார்த்தைகளை என்னால் படிக்க முடியவில்லை. கூச்சமாக இருக்கிறது எனக் கூறிய நீதிபதி விமர்சனம் செய்பவர்கள், அதை மட்டும் செய்து கொண்டிருக்காமல், சமூகத்திற்கு நலன் விளைவிக்கும் எதையாவது செய்யலாம்.
மேலும் நீதிமன்றத்தில் இவ்வாறு பேச மாட்டேன் எனக் கூறிய பின்பும் தொடர்ந்து துரைமுருகன் பேசி உள்ளார். எனவே இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நேரிடும்' என நீதிபதி எச்சரித்தார். பின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும்: ஜவுளித்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்