மதுரை: திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "பெண்கள் உபயோகிக்கும் நாப்கின் தயாரிக்கும் துணிகளை வைத்து அதனுடைய சுகாதாரமானது நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அதனுடைய விலை, விளம்பரம், அதனுடைய பேக்கேஜிங் வைத்து அதனை வாங்கிச் செல்கின்றனர்.
நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்கள் எந்தெந்தப் பொருள்கள் கொண்டு தயார்செய்கின்றனர் என்பது குறித்த விவரங்கள் கொடுப்பது இல்லை.
சுகாதாரம் இல்லாத நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் கேன்சர், கருப்பை, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்களது வாழ்நாளில் 11 ஆயிரம் முதல் 17 ஆயிரம் நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரமில்லாத நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் பலவகையான நோய்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
மூன்று அடுக்கு நாப்கின்கள் தயார் செய்யப்பட்டு அதற்கு இடையே எஸ்.ஏ.பி. (SAP) என்ற திரவம் சேர்க்கப்படுகிறது. இதனால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தலைவலி, காய்ச்சல், மேலும் இதனால் உருவாகும் பாக்டீரியாக்களினால் ரத்த அழுத்தம், மூளை சம்பந்த நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
எனவே நாப்கின் தயாரிப்பதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கவும், நாப்கின், குழந்தைகள் உபயோகிக்கும் டயப்பர் எந்தப் பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் பாக்கெட்டுகளில் இடம்பெற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் நாப்கின்கள் தரத்தை உறுதிப்படுத்த உரிய வழிமுறைகளை வகுக்கவும், நாப்கின் தயாரிக்கும் பொருள்களை பாக்கெட்டுகளில் அச்சிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
அதேசமயம் ஒன்றிய அரசுத் தரப்பில் இலவசமாகப் பெண்களுக்கு நாப்கின் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவிலிருந்து பரிசல் மூலமாக மதுபானம் கடத்தல்: 4 பேர் கைது!