மதுரை: பொதுவாகவே மதுரை உழவும் உழவு சார்ந்த பணிகளும் நடைபெறுகின்ற கிராமங்கள் சார்ந்த பகுதியாகும். இங்கு பல ஏக்கர் கணக்கில் நெல் விவசாயம் மிகக் கோலாகலமாக நடைபெறுவது உண்டு. சில பகுதிகளில் ஒரு போகம் விளைவிப்பதும் சில பகுதிகளில் இரண்டு போகங்கள் விளைவிப்பதும் வழக்கம். அதன் பொருட்டு மதுரை குறித்து, மதுரையை ஆள்வதாக சொல்லப்படும் மீனாட்சியின் அரசாட்சியில் மதுரை மாநகர் எவ்வாறு இருந்தது என்பதை 'அல்லி அரசாணி மாலை' என்ற பாடல் தொகுப்பில் 'வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்...' எனும் பாடல் தொடரில், இறுதி வரிகளாக "மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று, ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை" என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
மதுரையின் பசுமை நிறைந்த வயல்களில் விளைந்த நெற்கதிர்கள் அனைத்தையும் மாடுகளால் கட்டி போர் அடிக்க முடியாது என்று யானை கட்டி போரடித்த வளம் மிக்க நிலப்பரப்பாக மதுரை திகழ்ந்துள்ளது என்பதாக இந்தப் பாடல் பொருள் தருகிறது.
இவையெல்லாம் இலக்கியம் தரும் சான்றுகள் என்றாலும் தற்போதைய நவீன காலத்தில் இதுபோன்ற காட்சிகளை காண்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
ஆனால் நல்வாய்ப்பாக மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தில் சுமதி என்ற பெயர் உடைய யானை நெற்கதிர்களின் மீது உலாவிக் கொண்டு போரடித்த காட்சி, அந்தக் கால நினைவுகளை கொண்டு வந்து அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
யானை கட்டிப் போரடிக்கும் காட்சி இக்காணொலி குறித்து நிலத்திற்கும் யானைக்கும் சொந்தக்காரரான இளைஞர் மதன் நம்மிடம் பேசுகையில், "சுமதி எங்களது வளர்ப்பு யானை. நாங்கள் ஏறக்குறைய நான்கு தலைமுறைகளாக யானைகளை வளர்த்து வருகிறோம். புலிப்பட்டி கிராமத்தில் உள்ள எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்து இருந்தோம். அப்போது எங்களின் சுமதி ஆனையை கொண்டு அதில் போரடித்தோம். மதுரையின் சங்ககால இலக்கியக் காட்சியை கண் முன்னே கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விளைவு தான் இது" என்றார்.
பழைய தமிழ் திரைப்படங்களிலும்கூட ஆனை கட்டிப் போரடிக்கும் காட்சிகளை நாம் காண முடியும். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் வரை இதுபோன்று யானையை பயன்படுத்தி போராடிக்கின்ற முறை மதுரையிலிருந்து வந்தது என விவரம் அறிந்த நபர்கள் சொல்லக் கேட்கும்போது அதை எண்ணி உண்மையில் வியக்காமல் இருக்க முடியவில்லை.
இதையும் படிங்க:17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!