சேலம்: ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்தனர். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அன்று, கல்லூரிக்குச் சென்ற மாணவர் கோகுல்ராஜ் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
குற்றவாளிகள் கைதும் - டிஎஸ்பி தற்கொலையும்
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரும் நீண்ட தலைமறைவுக்குப் பின் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அரசு வழக்கறிஞர் மாற்றம்
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணையும் தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜின் காதலி சுவாதி உள்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை மாற்றக் கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.