மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செல்லம்பட்டி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் மியாவாக்கி முறையிலான குறுங்காடுகள் உருவாக்கும் முயற்சியில் அப்பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக செக்காணூரணி அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தின் ஊருணிக் கரைகளில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
நடவு செய்யக்கூடிய கன்றுகளுக்கு ஏற்றவாறு குழிகள் வெட்டப்பட்டு, அதில் மட்கிய இலை, தழைகள் போடப்படுகின்றன. பிறகு ஆடு, மாடு ஆகியவற்றின் சாணங்கள் கொட்டி நிரப்பப்படுகின்றன. இவை அனைத்தும் அந்தக் குழிகளுக்குள்ளே உரமாக்கப்படுகின்றன.
பிறகு புன்னை, ஆல், அரசு, கொன்றை, வாகை, கொய்யா, மா, நாவல் உள்ளிட்ட மரங்களோடு பூக்கும் மரங்கள் என கலந்து மியாவாக்கி முறையில் நடுகின்றனர். இரண்டடி இடைவெளியில் நடப்படும் இந்த மரங்கள் மிக அடர்த்தியாக வளர்கின்றன. உள்ளூர் மக்களையே இதனை நட்டுப் பராமரிக்கும் பணிக்கும் தயார்ப்படுத்துகின்றனர்.