பொதுவாக சாலை விபத்துகளில் இத்தனை பேர் பலி, பேருந்து மோதியதில் பயணிகள் படுகாயம் என்பன போன்ற செய்திகள் இல்லாமல் இதுவரை இருந்ததில்லை. ஆனால், கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு அந்நிலை முற்றிலுமாக மாறியது. சாலை விபத்து உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியான போக்குவரத்து சூழல் உருவாகியுள்ளது.
கரோனா காலத்தில் விபத்துகள் என்பவை குறைந்துவிட்டன. எடுத்துக்காட்டாக மதுரை மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் வரையான காலகட்டத்தில் நிகழ்ந்த மிக ஆபத்தான விபத்துகளின் எண்ணிக்கை 30. அவற்றில் இறந்தோர் 35 பேர். இதே காலகட்டத்தில் நிகழ்ந்த ஆபத்தற்ற விபத்துகளின் எண்ணிக்கை 210. இதில் காயமடைந்தோர் எண்ணிக்கை 268 பேர்.
அதாவது கரோனா காலகட்டத்தில் நடைபெற்ற மொத்த விபத்துகளே வெறும் 240 மட்டுமே. ஆனால், வழக்கமான மாதங்களில் இதைவிட இரு மடங்கு விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படும்.
மதுரை மாநகரில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை மிக ஆபத்தான 91 விபத்துகளும் ஆபத்தற்ற 293 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. 2020ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட அதே மாதங்களில் வெறும் 24 ஆபத்தான விபத்துகளும், 142 ஆபத்தற்ற விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இந்த கரோனா காலத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் சரி பாதியாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களில் சாலை போக்குவரத்தும் பொது மக்கள் நடமாட்டமும் குறைந்திருப்பதால் விபத்துகள் குறைந்துள்ளன. மதுரை மாநகரில் சாலை விபத்துகள் ஒன்று இரண்டு என்ற அளவில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முன்பாக வாரத்திற்கு சராசரியாக நான்கு உயிரழப்புகள் ஏற்படும்.
பொதுவாக மதுரையில் சாலையில் போதிய வசதி இல்லாதது, இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, வேலைப்பளுவால் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இவை எல்லாம் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக மதுரையில் பாலங்கள் அருகில்தான் அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன.
மதுரை என்பது சாலை விரிவாக்கம் செய்ய இயலாத ஒரு பெருநகர் ஆகும். ஆகையால் போக்குவரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் மட்டுமே இங்கு விபத்துகளை குறைக்க முடியும். குறிப்பாக ஏவி மேம்பாலம் மற்றும் யானைக்கல் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங்களை யானைக்கல் கீழ்பாலத்தில் அனுமதிக்கலாம்.