கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வாசிகளும் ஆதரவற்றோர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் மதுரையில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நடைபாதைகளில் வசித்து வந்தவர்களை மாநகராட்சிக்குச் சொந்தமான மண்டபங்களில் தங்கவைத்து அவர்களுக்குப் போதுமான வசதிகளை செய்து வருகின்றனர். அதன்படி, பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு, சமூக இடைவெளி, மாஸ்க், கிருமி நாசினி என அரசு சொன்ன அனைத்தையும் பின்பற்றினாலும் கரோனா பற்றிய பயம் அத்துமீறத்தான் செய்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டும் இப்படி தங்கியிருப்பவர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் பொருட்டும் தன்னார்வலர்கள் கூடி ஓர் முடிவு செய்தனர்.
அது தான் கேமில் ஈடுபடுத்துதல். அதுவும் அப்துல் ரகுமான் கண்டறிந்த வாழ்க்கையின் பல படி நிலைகளை கற்றுத் தரும் ப்ரைன் கேமில் ஈடுபடுத்துதல். இது குறித்து தன்னார்வலர் குளோரி கூறுகையில், "மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆதரவற்றோர் 89 பேரை மீட்டு இந்த மண்டபத்தில் தங்க வைத்துள்ளோம்.
அவர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிட வசதி செய்து கொடுத்தாலும் அவர்களின் மன அழுத்தத்தை போக்க நூல்கள், கலை நிகழ்ச்சி என நடத்தினாலும் அப்துல் ரகுமான் உருவாக்கியுள்ள விளையாட்டின் மூலம் அவர்கள் மிகவும் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்பது எங்களுக்கு வியப்பாக உள்ளது" என்றார்.
செஸ், கேரம் போன்ற வடிவத்தில் இருந்தாலும் அந்த விளையாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக, இந்த விளையாட்டு உள்ளது. வெறுமனே விளையாட்டு என்று இல்லாமல் வாழ்க்கை திறனை, சிந்திக்கும் ஆற்றலை, இயற்கையின் மீதான நேசத்தை மேம்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
30 முதல் 100 நபர்கள் வரை, ஒரே நேரத்தில் அமர்ந்து இதை விளையாட முடியும். இது குறித்து அப்துல் ரகுமான் கூறுகையில், "வீட்டுக்குள் முடங்கி இருக்கும் அனைவருக்கும் இந்த விளையாட்டு அருமருந்தாகும். தன்னார்வலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இப்படி ஒரு பேரிடர் காலங்களில் அனைவருக்கும் உறுதுணையாக இருந்து செயல்படுகிறார்கள்.