மதுரை: கரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் மதுரையில் நேற்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. தமிழ்நாடு மருத்துவக் கழகம் சார்பில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டது.
'நேற்று தொடக்கம்; இன்று நிறுத்தம்' ரெம்டெசிவருக்கு அலையும் மதுரைவாசிகள்
மதுரை அரசு இராசாசி அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்து விற்பனை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 500 பாட்டில் மருந்துகள் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டது. இன்று மருந்துகள் இருப்பு இல்லாத நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவக் கல்லூரி முன்பாக குவிந்தனர்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் திடீரென இன்று விடுமுறை என அறிவிப்பை ஒட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நீண்டநேரமாக காத்திருந்தனர். திடீரென விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டதால் மருந்துகள் கிடைக்காத நிலையில் அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும், போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே மருத்துவக் கல்லூரி முன்பாக கூடிய பொதுமக்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.