சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என மதுரை சொக்கிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், “மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகளான சங்கீதா, தீபா ஆகிய இருவரும் மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளான காமன்வெல்த், பசிபிக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார். தடகள வீராங்கனைகளான தீபா, சங்கீதா ஆகியோர் 40க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மாநில, தேசிய, மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் என 84 பதக்கங்களை பெற்று பெருமை தமிழ்நாட்டிற்கு சேர்த்து உள்ளனர். மேலும் ஜெர்மன், மலேசியா, லண்டன், துபாய், சீனா உள்ளிட்டநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றள்ளனர்.
இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு தீபாவுக்கு கல்பனா சால்வா விருது வழங்கப்பட்டது. முதுகலை பட்டப்படிப்பு பயின்ற தீபா, சங்கீதா ஆகிய இரு மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனைகளுக்கு நிரந்தர அரசுப்பணி வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவானது, உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்! மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தீபா மற்றும் சங்கீதா 40-க்கு மேற்பட்ட பதக்கங்களை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். தீபாவிற்கு இந்திய விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். இருவர்களுக்கும் உரிய அரசு பணி வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதி ஒத்திவைத்தது.
இதையும் படிங்க :திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட மதுரைக் கிளை அனுமதி