மதுரை ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பூதாகரமாகி உள்ளநிலையில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் இரு தரப்புக்கும் இடையே, அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில், தனது அலுவலகத்தில் இன்று (ஜூன்26) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'அதிமுகவின் நிரந்தர எதிரியான திமுகவை எதிர்க்க ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருந்தால்தான், அதைச் செய்ய முடியும்; திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவினரின் இரத்தத்தில் ஊறியது.
பராசக்தி வசனத்தை வைத்து தூங்கும் ஓபிஎஸ்: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓ.பன்னீர்செல்வம் பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என யார் மனதையோ குளிர்விக்கும் வகையில் பேசுகிறார். ரவீந்திரநாத் குமார் எம்.பி., திமுக முதலமைச்சரை சந்தித்து இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது எனப் பேசி வந்துள்ளார். இது அதிமுகவை சோர்வடைய செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை சேர்க்கக்கூடாது. ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி செய்தார்.
டிடிவி தினகரனோடு என்ன ரகசிய உறவு?பிறகு எதற்கு டிடிவி தினகரனோடு ஓ.பன்னீர்செல்வம் ரகசிய உறவாடுகிறார்; பேசுகிறார். சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்கவேண்டும். உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சந்தேகத் தலைமை வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும்; தொண்டர்களை அவர் கைவிட்டு விட்டார்.
கட்சி நலனில் அக்கறையற்றவர்:தொண்டர்கள் என்ற புனிதச்சுமையை சுமப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராக இல்லை. தனது குடும்பத்தின் நலன்மீது மட்டுமே அவர் அக்கறை காட்டினார். அவர் கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து இருப்பார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் முயன்று இருக்கிறோம்.
அதிமுக வரலாற்றிலேயே கிடையாது:ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. நம்பியார் திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்; ஆனால் உண்மையில் நல்லவர். ஓ.பன்னீர்செல்வம் நல்லவராக இருந்தாலும் தொண்டர்களை நலனில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காவல் துறைக்கு சென்று பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது. தொண்டர்களின் மனக்குமுறல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.