திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை கௌரவப் பேராசிரியரும், இந்திய பொருளியல் கழகத்தின் துணைத்தலைவருமான ரங்கா ரெட்டி, மதுரையில் ஈடிவி பாரத் செய்தியாளருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ள 2020ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் மக்கள் தொகை கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, வறுமை ஒழிப்பு என மூன்று முக்கிய விடயங்களில் நிதியமைச்சர் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இயற்கை மூலாதாரங்கள் பெருமளவு சுரண்டப்படுவதற்கான காரணியாக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளதால் இதனைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். அதேப்போன்று சுற்றுச்சூழல் மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய தூண்டுகோலாக உள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் இருப்பது வரவேற்பிற்குரியது. சூரிய ஆற்றல் பயன்பாடு, எலக்ட்ரிக் வாகனங்கள் என அறிவிப்பு செய்துள்ளது வரவேற்புக்குரிய ஒன்றாகும். இதனால் மனித ஆயுள் கூடுவதற்கு வாய்ப்பு உருவாகும். இந்தியாவின் வளர்ச்சியை பின்னுக்கிழுக்கும் முக்கிய காரணியாக வறுமை உள்ளது. தேசத்தின் எந்தப் பகுதிகளுக்குச் சென்றாலும் பிச்சையெடுக்கும் நபர்களை சர்வசாதாரணமாக காணும் நிலையுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற நபர்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், சர்வதேச அடிப்படை ஊதிய அளவான ரூ.10 ஆயிரத்தை, ஏழ்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.