ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனது கணவர் பாலமுருகன் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றிவந் நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இரண்டு குழந்தைகளுடன் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனவே எனது கணவரை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பிலிருந்து, சத்தீஸ்கரில் காணாமல்போன சிஆர்பிஎஃப் வீரரின் செல்போன் ஐஎம்இஐ நம்பரை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்தோம். ஆனால், செல்போனை வைத்திருந்தவர் அதனை கீழே கிடந்து எடுத்ததாக தெரிவித்தார் என்று கூறப்பட்டது.