சிவகங்கை மாவட்டம் கோமாலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தீர்க்கதரிசினி. இவர் எப்போதும் போல விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இடது கண்ணில் மீன் பிடிக்கும் தூண்டில் முள் சிக்கியது.
இதனால் ஏற்பட்ட கடுமையான வலியால் சிறுமி துடிதுடித்துப் போனாள். சிறிது நேரத்திலேயே சிறுமியின் கண் வீங்க தொடங்கியது. தனக்கு நேர்ந்ததைப் பெற்றோரிடம் சொல்லக் கூடத் தெரியாத வயதில் தீர்க்கதரிசினி தன்னுடைய பார்வைத் திறனை மெல்ல இழக்கத் தொடங்கினாள். இந்தச் சின்ன வயதிலேயே தங்களது குழந்தைக்கு பார்வை பறிபோய்விடுமோ எனப் பதறிய சிறுமியின் பெற்றோர், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டார்.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் மிக விரைவாக அக்குழந்தைக்கு கண் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பிஞ்சுக் குழந்தையின் இடது கண்ணில் தூண்டில் முள் சிக்கியிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.