மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, காவிரி மேலாண்மை வாரியத்தின் அறிவிப்புகளை கர்நாடக அரசு ஏற்க வேண்டும். ஆணைய கூட்டத்தை டெல்லியில் நடத்தாமல் கர்நாடகத்தில் நடத்த வேண்டும். காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கத் தவறினால் ஆணையத்தை, மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் வரதுக்குள்ள மழையே வந்துடும் - கே.எஸ். அழகிரி
மதுரை: தமிழ்நாடு அரசு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் மழையே வந்துவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல மூன்று வாரங்கள் தான் ஆகும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என்பது கேலிக்குறியதாக இருக்கிறது. எனவே நத்தை வேகத்தில் செயல்படும் அரசு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தண்ணீர் கொண்டு வருவதற்குள் மழையே வந்துவிடும். தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க அரசு முறையாக திட்டமிட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு சிலர் கூறி வரும் கருத்துக்கள் எங்கள் கூட்டணியை ஒன்றும் செய்யாது. கொள்கை அடிப்படையிலான இந்த கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் நிச்சயமாக தொடரும் என்று பதிலளித்தார்.