மதுரை: இந்திய ரயில்வே வாரியம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்குகின்ற ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று (ஆக.07) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்படி கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க தேசிய ஹைட்ரஜன் தொலைநோக்கு திட்டம் மற்றும் மேம்பட்ட வேதியியல் கூறு மின்கல பயன்பாடு ஆகியவற்றை பின்பற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாட்டில் ஹைட்ரஜன் வாயு உற்பத்தி அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை போக்குவரத்தாக ரயில் போக்குவரத்தை மாற்ற ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ரயில் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இரு பக்கமும் டீசல் என்ஜின்கள் உள்ள "டெமு" வகை ரயில் தொடரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒப்பந்தம் கோரியுள்ளது.
ரயில்வே அமைச்சர் அறிவிப்பு இந்தத் திட்டம் ஹரியானா மாநிலத்தில் உள்ள வடக்கு ரயில்வே பகுதியான சோனிபட் - ஜீந்த் ரயில்பாதை பிரிவில் அமல்படுத்தப்படவுள்ளது. ஒப்பந்தத்திற்கு முன்பான ஒப்பந்ததாரருடனான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 17, செப்டம்பர் 19 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. அதற்குப் பின்பு இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை வழங்கவும் கோரியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே 2.3 கோடி ரூபாய் அளவிலான எரிபொருள் செலவுகளை குறைக்க வாய்ப்பு உள்ளது. ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது" என அதில் கூறப்பட்டுள்ளது.