தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘ராகுல் காந்தி நடைபயணத்தால் 2024ஆம் ஆண்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்’ - நாராயணசாமி - bharat jodo yatra

ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து 2024ஆம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி பேட்டி
நாராயணசாமி பேட்டி

By

Published : Sep 10, 2022, 4:12 PM IST

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி தரிசனம் செய்தார். பின்னர், ராகுல் காந்தியின் ’பாரத் ஜோடோ யாத்ரா’ நடைபயணம் மூலம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து 2024 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“ராகுல்காந்தியின் பாதயாத்திரை எழுச்சி மிக்கதாகும். மத்திய பாஜக அரசு மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மதக்கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கிறது. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர். பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்கிறார். ஏழை, எளிய மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

மோடி கொடுத்த வாக்குறுதிபடி 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் வெறும் 16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன. இந்திய நாட்டின் அந்நியச் செலவாணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்து விட்டது. சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளோடு நல்ல உறவில்லாத நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது. பாஜக அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை.

மணிப்பூர், மேகலாயா, கர்நாடகா, புதுச்சேரியில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது, பல ஆயிரம் கோடிகளை கொடுத்து ஆட்சியை கலைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை, ஜனநாயக படுகொலையை பாஜக செய்கிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது.

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை ஏவி சோதனை நடத்துகின்றனர். அதே எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது. திமுக காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநிலங்களை, மாநில மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது.

என்ன வளர்ச்சிப்பாதையில் நாடு சென்றுள்ளது?. ஏற்கனவே இருந்த திட்டங்களை தான் மோடி மாற்றியமைத்துள்ளார். இந்திய நாட்டிற்கு அனைத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி தான்.வருகின்ற 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. தேர்தல் வரும் வரை பொறுமையாக இருப்போம்.

ராகுல்காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை. சீமான் எங்கள் கட்சியில் வேண்டுமானால் சேர்ந்துவிட்டு பேசட்டும்” என்றார்.

நாராயணசாமி பேட்டி

தொடர்ந்து ராகுல் காந்தியின் டி- சர்ட் விலை குறித்து பாஜக சார்பில் முன்வைக்கப்படுள்ள விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”மோடி இத்தாலி, அமெரிக்காவில் லண்டனிலிருந்து வரும் உடைகளை அணிகிறார். எங்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி யோக்கிதை பாஜகவுக்கு உள்ளது”, என்றார்.

இதையும் படிங்க:ஒரு மேடையில் 80 விழுக்காடு... மற்றொரு மேடையில் 70 விழுக்காடு... முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்...

ABOUT THE AUTHOR

...view details