சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுவது போல மதுரை விழாமலி மூதூர் என்பது மிக மிகப் பொருத்தம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு திருவிழா என்று நாள்தோறும் விழாக்கள் களைகட்டும். உலகின் வரலாற்று சிறப்புமிக்க நகரம் தான் மதுரை. அதிலும் குறிப்பாக சித்திரை திருவிழா உலகத்தின் பார்வையை தன்னுள் திருப்பிய ஆகப்பெரும் விழாவாகும். மீனாட்சி திருக்கல்யாணமும் அதன் தொடர்ச்சியாக தேரோட்டமும் வைணவப் பெருந்தகை விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மதுரையின் தவிர்க்க இயலாத தனிச்சிறப்புமிக்க அடையாளங்களாகும்.
தற்போது கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் கூடும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு மதுரை சித்திரைத் திருவிழாவும் விதிவிலக்காகுமா என்ன? மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் திருமலை மன்னருக்கு தனிச் சிறப்பான இடம் உண்டு. சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சித்திரைப் பெருவிழாவை அவர் பயன்படுத்திக் கொண்டார். சற்று ஏறக்குறைய 400 ஆண்டுகள் திருவிழா, மதுரை மண்ணோடு பின்னிப்பிணைந்து அதன் பண்பாடாகவே மாறிவிட்டது. சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டிருப்பது மதுரை மக்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சேவாபாரதி தன்னார்வ உறுப்பினரான ராமச்சந்திரன் கூறுகையில், "மதுரை மக்கள் அனைவருக்கும் மற்றொரு குலதெய்வமாக இருப்பவர் கள்ளழகர். காலம் காலமாக நடைபெற்று வந்த இந்த நிகழ்வினை மீனாட்சி திருக்கல்யாணம் நடத்துவது போன்று நடத்த காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டும். ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையும் அதுதான். கள்ளழகர் மதுரை மண்ணில் கால் பதித்தால் அந்த ஆண்டு வளமும் குலம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு தமிழ்நாடு அரசு பாத்திரமாக திகழ வேண்டும்", என்றார்