மதுரை: மதுரையில் சிறுகுறு தொழில் வர்த்தக சங்கத்தில் 'வங்கி - வாடிக்கையாளர்கள் தொடர்பு' சிறப்பு முகாமில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், 30க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள், அதன் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "தமிழ்நாடு நிதி ஆதாரத்தை பெருக்க முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சமூகநீதி என்பது யாரும் பின்தங்காமல் அனைவரையும் இணைத்து வளர்ச்சியடைய வைப்பதே எங்கள் இலக்கு.
வங்கியும் அரசும் இணைந்தால்தான் வளர்ச்சி
அரசாங்கத்தின் இலக்குகளை திட்டங்களை செயல்படுத்த அரசும், வங்கிகளும் இணைந்து வேலை செய்தால்தான் வளர்ச்சியடைய முடியும். பேரிடர் நேரத்தில் அரசாங்கமும், வங்கிகளும் இணைந்து வேலை செய்ய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் கையில் பணம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஐந்து மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் கையில் பணம் கொடுக்கப்பட்டது.
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உரை வங்கிகள் மேம்பட வேண்டும்
நிவாரணம், கடன்கள் என பல்வேறு வழியில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் மக்கள் பணமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத்துறை வங்கிகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். வங்கிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வாய்ப்புகள் வழங்கவில்லை என்றால் கந்து வட்டி அதிகரிக்கும். பொதுத்துறை வங்கிகள் மக்களின் தேவைக்கு ஏற்ப கடன்களை வழங்க வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி - திருமாவளவன் வலியுறுத்தல்