தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை; சிறைக்கைதி சாட்சியம்! - Custodial death of P Jayaraj and Bennicks

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை வழக்கு விசாரணையானது இன்று (நவ.27) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறைக்கைதி கருப்பசாமி என்பவர் நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார்.

சாத்தான்குளம் படுகொலை
சாத்தான்குளம் படுகொலை

By

Published : Nov 27, 2021, 3:10 PM IST

மதுரை : சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை வழக்கில் தந்தை மகன் இருவரும் காயங்களுடன் சிறைக்குள் வந்ததாக கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த சிறைவாசி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான, தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
9 பேரும் ஆஜர்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது சனிக்கிழமை (நவ.27) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கின் சாட்சியான ஜெயராஜ் பென்னிக்ஸ் அடைக்கப்பட்ட கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை மகன் இருந்த அறையில் உடனிருந்த சிறைவாசியாக நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். தற்போது கருப்பசாமி பிணையில் வெளிவந்துள்ள நிலையில் சாட்சியம் அளித்தார்.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்
அப்போது தந்தை மகன் இருவரும் சிறைக்குள் வரும்போது உடலில் இருந்த காயங்களின் தன்மை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும், உணவு எடுத்துக் கொள்ளவில்லை எனவும் சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து சாட்சியத்திடம் குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்களின் தரப்பினர் தரப்பில் வழக்கறிஞர்களும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும் குறுக்கு விசாரணை நடத்தினார்.

டிச.4 ஒத்திவைப்பு
வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வரும் 4ஆம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் சிற்கு மருத்துவப் பரிசோதனை செய்த அரசு மருத்துவரான வெங்கடேஷ் சாட்சியம் அளிக்க வாய்ப்புள்ளது.
விசாரணை
இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள் , அரசு மருத்துவர்கள், செவிலியர், உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க :சாத்தான்குளம் விவகாரம்: குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details