சிறையில் கைதி உயிரிழப்பு: நீதிமன்றம் உத்தரவு
மதுரை: பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ இறந்த விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை வாகைக்குளத்தை சேர்ந்த பாவநாசம் என்ற நபர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகன் முத்து மனோ களக்காடு காவல் துறையினரால் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். கடந்த ஏப்ரல் 22ல் என் மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தி, தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு, இந்த வழக்கு தொடர்பாக 60 நாள்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். 70 நாள்களுக்கு மேலாகியும் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
அதேபோல் முத்து மனோ, பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் 60 நாள்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் . ஆனால் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை, பாதிக்கப்படோரிடம் விசாரணை நடைபெறவில்லை என வாதிட்டார்.
அரசு தரப்பு, சிபிசிஐடி காவல் துறையினர், விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. உயர் அலுவலர்கள் தலைமையில் இந்த வழக்கு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் விசாரணைக்குப் பாதிக்கப்பட்டோர் ஒத்துழைக்கவில்லை என வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், உயிரிழந்த கைதி முத்து மனோவின் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் முத்து மனோ உயிரிழப்பில் மனுதாரருக்கு மேலும் என்ன கோரிக்கைகள் உள்ளன என்பது குறித்து கூடுதல் மனுவாக ஜூலை 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 19ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
TAGGED:
சிறையில் கைதி உயிரிழப்பு