மதுரை:பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 15) மிகக் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் ஏழு சுற்றுகளில் நிறைவாக அதிக காளைகளைப் பிடித்த இரண்டாவது சிறந்த வீரராகத் தேர்வுசெய்யப்பட்ட மதுரை - மேலமடையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நான் அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண நபர். காளை மாடுகளைப் பிடிக்கும் லாவகம் குறித்துப் பல்வேறு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நான் போட்டிகளில் பங்கேற்றுவருகிறேன். என்னுடைய நண்பர்களின் உதவி இல்லாமல் நான் இந்தச் சாதனைபுரிந்திருக்க முடியாது.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் அரசியல்!
பொதுவாக ஜல்லிக்கட்டு நடைபெறும்போது வெற்றிபெற்றவர்கள் குறித்த அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் இப்போதும் உள்ளன. அரசியல் பலம், ஆள் பலம்தான் யார் பரிசு பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதன்மூலம் அடித்தட்டிலிருந்து வருகின்ற என்னைப் போன்ற நபர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வருங்காலத்தில் இதுபோன்ற நிலை மாற வேண்டும்" என்றார்.