மதுரை: தல்லாகுளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிப்புரிந்தவர் வீரதங்கால். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோசடி செய்ததாக என் சகோதரர் ஜீவா அளித்த புகாரின் அடிப்படையில் என் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனக்கும், எனது சகோதரருக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சினைக்கான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் என்னைப் பழிவாங்கும் நோக்கில் தற்போது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் என மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்விரோதமே காரணம்
எனது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவியல் காவல் நிலைய ஆய்வாளர் என்னை அழைத்து விசாரணை செய்தார். விசாரணையில் எனது தரப்பு நியாயங்களை ஆவணங்களையும் எடுத்து வைத்தேன். அதனை எதையுமே காவல் ஆய்வாளர் ஏற்றுக் கொள்ளாமல் இந்த வழக்கு இயந்திரத்தனமாக பதியப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணங்களால் பதியப்படும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் உள்ளது. எனவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை முதற்கட்டத்தில்...
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "தலைமை காவலர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முதல் கட்டத்தில் இருக்கிறது. மேலும் இவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நீதிபதி சுவாமிநாதன், "தலைமை காவலர் மீது தற்போதுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல" எனக்கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமியரின் வாக்குமூலத்திற்கு மொழிபெயர்ப்பாளர் அவசியம்!