மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”கடந்த திமுக ஆட்சியின் போது போலியான, தவறான விவரங்களையெல்லாம் வரலாறு என்ற பெயரில் பள்ளி, கல்லூரி புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 9 வகுப்பு மற்றும் கல்லூரி பாடப் புத்தகத்தில், தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக தவறான தகவல் கூறப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் நமது தேசம் இல்லை. மேலும் யுனெஸ்கோவின் முத்திரை போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விருதை 1970ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறான விசயங்களை கற்கும் போது தவறான புரிதலும் மற்றும் எதிர்காலமும் கேள்விக்குரியதாகிறது. ஆகையால் ஒன்பதாம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டத்திலும், கல்லூரி பாடத்திட்டத்திலும் பெரியார் குறித்து உள்ள தவறான தகவல்களை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.