மதுரையில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம், சிறைச்சாலையை போன்றுள்ளது. இங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது ஐநா ஆணையத்திடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மூன்று இஸ்லாமிய நாடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அங்கிருந்து வருகின்ற இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்று மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்றாகும். இந்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: கலவர பூமியான உத்தரப் பிரதேசம்!
இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் போரினால் இந்திய நாட்டிற்கு வந்தவர்கள். மொழி, நாகரீகம், பண்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் தொடர்புள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு சொந்த நாடு உள்ளதால் அவர்கள் இலங்கை செல்ல விரும்புகிறார்கள். ஆனால், தற்போதைய நிலையில் அவர்கள் செல்ல முடியாது எனவே அவர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க வேண்டும்.