பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்காக சென்னைக்கு படையெடுத்ததால், மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் நேற்று (ஜனவரி 17) பயணிகளால் நிரம்பி வழிந்தது. சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியதால் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி - பொங்கல் விடுமுறையை
மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லாததால் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், பயணிகளை வரிசையாக முறைப்படுத்தி அனுப்ப தவறியதால் ஏற்பட்ட குளறுபடி எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். பண்டிகை காலங்களில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்பட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மண்டலத்தில் இருந்து மட்டும் 80 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட்ட போதிலும், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை என்றார். மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.