மதுரை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எல்லா ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களுக்கும் இந்தியில் "சக்யோக்" என்று பெயரிட வேண்டும் என அனைத்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் ஆணையை அனுப்பியுள்ளது.
இந்த திடீர் மாற்றம் எதற்காக என்று புரியவில்லை. ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களின் பெயர், அவரவர் தாய் மொழியில் இருந்தால்தான் பயணிகள் எளிதாக சேவைகளைப்பெற முடியும். இந்தியாவில் இன்றும் 22 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர். இந்த நிலையில், மக்கள் அந்நியமாக உணரும் வகையில் வேறு மொழியை திணிப்பது அநியாயம் அல்லவா? இது மக்களை இன்னலுக்கு ஆளாக்காதா? பல பயணிகள் கடைசி நிமிடத்தில்தான் இதுபோன்ற சேவைகளை அணுக முற்படுவார்கள், அவர்களை சிரமத்திற்கு ஆளாக்கலாமா?
இதுபோன்ற நடைமுறைப் பிரச்னைகளைக்கடந்து, இந்த முடிவு அலுவல்மொழி விதிகள் 1976ஐ மீறக் கூடியதாகும். அலுவல் மொழி விதிகளின் முதல் பகுதி பிரிவு 2ல், 'இவ்விதிகள் தமிழ்நாடு மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்தும்' என்கிறது.