தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாண்டியன் எக்ஸ்பிரஸ் வெறும் ரயில் மட்டுமல்ல... அது ஒரு உணர்வு! - பாண்டியன் எக்ஸ்பிரஸ்

மதுரை: நேற்றிரவு மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலின் பொன்விழாவை, ரயில் பயண ஆர்வலர்களும் பயணிகளும் உற்சாகத்துடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

pandian express golden jubilee

By

Published : Oct 2, 2019, 12:15 PM IST

மதுரை - சென்னை ரயில் வழித்தடத்தில் கடந்த 1969ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மதுரையில் நேற்று தனது பொன்விழாவைக் கொண்டாடியது. ரயில் பயண ஆர்வலர்களால் முன்னின்று நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், பணி நிறைவுபெற்ற என்ஜின் டிரைவர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்கள் தொடர்பு அலுவலர் வீராச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூத்த டிரைவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பொன்விழா கொண்டாடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ்
இந்த நிகழ்வு குறித்து பெங்களூரைச் சேர்ந்த ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், ”கடந்த 25 ஆண்டுகளாக பாண்டியனில் பயணம் மேற்கொண்டுவருகிறேன். நேரத்திற்கு துல்லியமாக வருகின்ற ரயில்களில் பாண்டியனும் ஒன்று. நடைமேடைக்குள் பாண்டியன் ரயில் வரும்போது தங்களின் கடிகார நேரத்தை சரிசெய்து கொண்டவர்களும் உண்டு.மதுரைக்கென பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ரயில் இதுதான். இதற்கு ஹனிமூன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு. ஆண்டின் அனைத்து நாட்களிலும் பயணிகளால் முழுவதும் நிறைந்து செல்லக்கூடிய இந்திய ரயில்களில் பாண்டியனுக்கும் தனி இடம் உண்டு.

முதன் முதலில் பாண்டியன் வேகம் 11 மணி நேரம் 30 நிமிடங்களாக இருந்தது. தற்போது 7 மணி நேரம் 4 நிமிடங்களாக வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து விஜபிகளின் தேர்வு பாண்டியனாகத்தான் இருக்கும். அதனாலேயே இதற்கு விஜபி எக்ஸ்பிரஸ் (VIP express) என்ற பெயரும் உண்டு' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் வெறும் ரயில் மட்டுமல்ல... அது ஒரு உணர்வு!
பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலின் தற்போதைய டிரைவர் செல்வராஜன் கூறுகையில், ”என்னுடைய தாத்தா, அப்பா இருவருமே பாண்டியன் எக்ஸ்பிரஸில் டிரைவராக பணியாற்றியவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து தற்போது நானும் அப்பணியில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.தென்னக ரயில்வேயில் அவ்வப்போது கொண்டு வரப்பட்ட மாற்றங்களை முதன்முதலாக பாண்டியன் விரைவு ரயில் மூலமாகவே மேற்கொண்டனர். பொன்விழா கொண்டாடும் பாண்டியன் விரைவு ரயில் டிரைவராக பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன்' என்றார்.


இந்த ரயிலில் கார்டாக(Guard) பணியாற்றும் அமலபாலன் கூறுகையில், ”18 பெட்டிகளுடன் ஆலிவ் பச்சை நிறத்தில் பாண்டியன் கடந்த 1969ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அறிமுகமானது. தற்போது 23 பெட்டிகளுடன் மதுரையிலிருந்து சென்னை வரை இயக்கப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து கிளம்பிச் செல்லும் பாண்டியன் இடையில் கொடைரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்கிறது' என்றார்.

மிகச் சாதாரண மனிதர்களும் வசதியான முறையில் பயணம் செய்வதற்குரிய அனைத்து அம்சங்களோடு பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்றளவும் திகழ்ந்து வருவதாக பயணிகள் மகிழ்ந்து பாராட்டினர். பாண்டியன் எக்ஸ்பிரஸ் குறித்து ரயில் ஆர்வலர்கள் கூறுவைதைக் கேட்கையில் ஒருமுறையாவது நாமும் பாண்டியனில் பயணித்துவிட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழாமலில்லை.

ABOUT THE AUTHOR

...view details