மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மதுரையில் இன்று (நவ.01) நடைபெற்றது.
இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த, “ஓ. பன்னீர்செல்வம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். அது குறித்த கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் கேரள அரசின் இடையூறு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க ஜீவாதார உரிமையை பெற்று தந்துள்ளார். மேலும், 142 அடி நீரை தேக்குவதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மூன்று முறை 142 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த அணையின் நீரால் தமிழ்நாட்டின் ஐந்து தென்மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.
அணையில் 142 அடி தண்ணீரை தேக்க கேரள அரசு பல்வேறு வகையிலும் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. ஆனாலும் கேரள அரசின் இடையூறுகளைத் திமுக தலைமையிலான அரசு கண்டும் காணாமல் உள்ளது” என குற்றஞ்சாட்டினார்.
மருதுபாண்டியர் சகோதரருக்கு மரியாதை செலுத்திய ஓபிஎஸ் தேவர் சிலைக்கு மரியாதை
முன்னதாக மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுதினார்.
இதையும் படிங்க:'ஜெய்பீம்' ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் - சூர்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு