மதுரை தனியார் ஹோட்டலில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது அவர், நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நடைபெறவுள்ளது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் எனத் தெரிவித்தார்..
எந்த ஒரு வழக்காடு மன்றத்தில் சென்று சட்டப்போராட்டம் நடத்தி, இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டார். துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார் என கிண்டலடித்த ஓபிஎஸ், துரைமுருகன் கூறிய கருத்து கடந்த காலத்தில் இருந்து ஒவ்வாத கருத்தாக இருக்கிறது என விமர்சித்தார்.
தங்க தமிழ்ச்செல்வன் குறித்த கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம், கடந்த தர்மயுத்தம் காலத்திலிருந்தே, தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு தான் பதில் கூறியதே இல்லை என்றார். சட்டம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து அங்கு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, மற்றொரு கட்சியில் பதவி பெற்று நீடிக்கின்றபொழுது, அவர் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என்பது சட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.
மூன்று பேரும் அமமுக கட்சியில் இணையவில்லை என்றால், சட்டப் பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கி இருக்கலாம். அவரிடம் வந்து விளக்கம் அளித்து இருக்கலாம் என கூறினார்.