மதுரை:கரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அண்மையில் ஒமைக்ரான் தொடர்பாக ஆய்வுமேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தமிழ்நாட்டிலேயே மதுரைதான் மிகவும் பின்தங்கியுள்ளது என வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களின் வருகையை அதிகப்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 3) செய்தியாளரிடம் பேசிய அவர், “பொதுமக்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.
மதுரையிலுள்ள உணவகங்கள், விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், சிறு-குறு வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சந்தைகள், டாஸ்மாக் மதுபானக்கடைகள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இனி தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதியில்லை.
தங்களின் பணியாளர்கள் மூலமாக அந்தந்த நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தற்போது ஒருவார கால அவகாசம் அளிக்கப்படும். இந்தக் காலகட்டங்களில் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவார்கள். நாளையும் (டிசம்பர் 4), டிசம்பர் 11ஆம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.