தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ் நேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “திருச்சி அசூரில் இயங்கும் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம், சுமார் 1,500 சிலிண்டர்களை வைத்து, பாதுகாப்பற்ற முறையில் தினமும் 200 கிலோ ஆக்சிஜன் கேஸ் நிரப்பிவருகின்றனர். இதற்காக இந்நிறுவனம் உள்ளூர் பஞ்சாயத்தில் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. கொதிகலன் ஆய்வாளர், சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் பெறவில்லை.
ஊரின் மையப்பகுதியில் இந்நிறுவனம் இயங்குவதால் ஏதாவது விபத்து ஏற்பட்டால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. கடந்த ஜனவரியில் குஜராத்தில் இதுபோன்ற சிலிண்டர் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. எனவே பாதுகாப்பற்ற இந்நிறுவனம் செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கரோனா காலமான தற்போது ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ள வேளையில், மனுதாரர் சார்ந்த கட்சி, எதன் அடிப்படையில் இவ்வழக்கை தொடுத்தது எனக் கேள்வி எழுப்பினர்.