மதுரை:தேனி மாவட்ட அதிமுக சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள பயணியர் விடுதியின் முன்பாக இன்று(டிச.17) திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.ஜக்கையன் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது கண்டன உரையாற்றிய ஓ.பி.எஸ் பேசுகையில், 'அடிப்படை உறுப்பினர்களால் தான் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறியுள்ளது.
தற்போதைய தலைமை இன்றைக்கு எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் அடிப்படையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுக
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாவின் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டன. அதன் காரணமாக தான் தமிழ்நாட்டில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்தது.
கொடிய நோயான கரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைந்தன. அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்காக 505 வாக்குறுதிகளை கொடுத்து, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
தமிழ்நாட்டின் நீர் ஆதாரப் பிரச்னையான காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடான அணைகளில் தமிழ்நாட்டிற்கு உரிமை கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர், ஜெயலலிதா. ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது, திமுக அரசு.