தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஜனவரி 14) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் ஜல்லிக்கட்டை ஏன் ஊக்குவிக்கிறார்கள் என்பதை தான் அறிந்து கொண்டதாகவும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறு என்றார். தமிழ் மக்களின் உணர்வுகளையும், மொழியையும் யாராலும் நசுக்க முடியாது என்று சூளுரைத்த ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டில் பங்கேற்ற இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.