தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "என் மகன் ஸ்ரீதர் சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்தார். கட்டணம் செலுத்தப்பட்டது.
கரோனா ஊரடங்கால் தேர்வுகள் நடத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் அனைத்து மாணவர்களும் அடுத்தகட்ட படிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், என் மகனுக்கு மட்டும் தேர்ச்சி அளிக்கப்படவில்லை. என் மகன் பெயர் விடுபட்டுபோனதால், அடுத்த கல்வியாண்டில் நிச்சயம் சேர்ப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், 2020-21ஆம் கல்வி ஆண்டிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தும், தேர்ச்சி வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் தேர்ச்சி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர், என் மகனுக்கு வருகைப் பதிவேடு இல்லையெனக் கூறி மீண்டும் நிராகரித்தார்.
எனவே, நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனது மகன் 2020-21ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ், ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்பது என்பது மாணவர்களிடம் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி வகுப்புகள் இல்லாமல் 2020-21ஆம் கல்வியாண்டு முழுமையாக ஆன்லைன் முறையிலேயே நடந்துள்ளது. 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு அரசு கொள்கை ரீதியாக இவர்கள் அனைவரும் பாஸ் என அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மனுதாரர் மகன் இந்தப் பள்ளியில் தான் படித்துள்ளார். ஆனால் முறையாக வகுப்பிற்கு வரவில்லை எனக்கூறி நிராகரிப்பதை ஏற்க முடியாது.
கரோனாவால் பல சிறுவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, கவுன்சிலிங் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் புதுவிதமான பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2020-21ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றதாக 2 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.