இந்திய விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற நேரம். ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டும் பெரும் முயற்சியில் இந்தியா முழுவதும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாகக் கடந்த 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி மதுரைக்கு வந்தார்.
உள்ளூர் காங்கிரசார் ஏற்பாட்டின் பேரில், மதுரை மேலமாசி வீதியிலுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜி - கல்யாண்ஜி என்பவரின் வீட்டின் மேல் மாடியில்தான் தங்கினார். திண்டுக்கல்லிலிருந்து தொடர்வண்டியில் மதுரை திரும்பும்போதுதான், விவசாயப் பெருங்குடிகளின் வாழ்நிலை கண்டு மனம் வருந்தினார் காந்தியடிகள். அதனைத் தொடர்ந்து மதுரை சோழவந்தான் அருகே வந்து கொண்டிருக்கும்போது, அவருக்குள் உதயமான தீர்க்கமான மனநிலையின் வெளிப்பாடாய் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள், தான் தங்கியிருந்த மேலமாசிவீதி வீட்டில் அரையாடை விரதம் பூண்டார்.
காந்தியின் வெண்கல சிலை அமையும் இடம் காந்தியடிகள் மதுரைக்கு வந்த, ஐந்து வருகையும் மிக முக்கியத்துவமானதாகும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாய் அமைந்தது 1921ஆம் ஆண்டு நிகழ்ந்த வருகை. அப்போதுதான் அரையாடை விரதம் பூண்ட நிகழ்வு நடைபெற்றது. மதுரையில் தொடங்கியிருந்தாலும், தனது இறப்பு வரை அந்த விரதத்தைக் கடைப்பிடித்தார் மகாத்மா.
1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் காந்தியடிகள் தலைமையில் அன்றைய காலையின் முதல் பரப்புரைக் கூட்டம், தற்போதைய மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஒரு திடலில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்தான் இந்திய மக்களின் வறுமை நிலை தீரும் வரை தான் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்தார். காந்தியடிகள் உரையாற்றிய அந்த இடம் இன்றைக்கு 'காந்திப் பொட்டல்' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
அக்குறிப்பிட்ட இடத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி காந்தி சிலை ஒன்றைக் காங்கிரஸ் கட்சிக்காரர்களும், சிவாஜி ரசிகர்களும் இணைந்து அமைத்தனர். இச்சிலை அமைப்பிற்கு நடிகர் சிவாஜி கணேசனும் பண உதவி செய்திருந்தார். இந்நிலையில் அக்குறிப்பிட்ட காந்தி சிலை, மிகவும் பழுதாகி இருந்த நிலையில் அதனை மாற்றி புதிய சிலையை அமைக்கும் தீர்மானத்தை மதுரை கிழக்குத் தொகுதி சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை எடுத்திருந்தனர். கடந்தாண்டு அதற்கு மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தனர்.
காந்தியின் வெண்கல சிலை அமைக்கும் பணிகள் தீவிரம் இதுகுறித்து சிலை அமைப்புக் குழுவின் தலைவர் சாமி நம்மிடம் கூறுகையில், 'ஐந்தடி உயரத்திலான புதிய வெண்கலச் சிலை உருவாக்கும் பணி கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது, மாநில அரசு புதிய சிலை அமைக்க அனுமதி அளித்துள்ள நிலையில் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியன்று, இந்த இடத்தில் அதனை நிறுவ உள்ளோம். ஏறக்குறைய ஆறு லட்சம் மதிப்பீட்டில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்போது உள்ள சிலையை அகற்றி பீடத்தைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது' என்றார்.