மதுரை: நெல்லைக் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை சிஏஏ திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 2019 டிசம்பர் 29இல் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய போது, பிரதமர் மோடி குறித்தும், அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாகக்கூறி பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே "ஜோலியை முடிக்கலியா?" என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல.
ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. இதில் நெல்லை கண்ணன் தரப்பு, அரசு தரப்பு ஆகிய இருபக்க வாதமும் முடிவடைந்தது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி உத்தரவு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:பாரத் நெட் திட்டம் மூலம் 12 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய சேவை!