மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ராம்சங்கர் கதிரியா, துணைத் தலைவர் முருகன் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், ’தனித்தனி சமுதாயத்திற்காக உருவாக்கப்படும் மயானங்களால் அரசே தீண்டாமையை ஊக்குவிப்பதுபோல அமைந்துவிடுவதால், இனி பொது மயானங்களுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஊரகப் பகுதிகளில்தான் அதிக அளவில், சமுதாய அடிப்படையிலான மயானங்கள் அமைக்கப்படுகின்றன. அதனால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமுதாய அடிப்படையிலான மயானங்களைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுவருகிறது’ என்றார்.