மதுரை:மக்கள் பிரதிநிதிகள் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், அந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் நிகழ்வு மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்; வழக்கறிஞர்கள் கண்ணன், புகழேந்தி மற்றும் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தி திணிப்பு நடவடிக்கை
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சு. வெங்கடேசன், “ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. அரசின் 80 விழுக்காடு திட்டங்களுக்கு இந்தியிலேயே பெயர் சூட்டப்படுகிறது. இந்தியாவின் மொழி சமத்துவத்திற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்திய ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது.