மதுரை வழி செல்லும் ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு - MP S. Venkatesh's petition for train passengers going via Madurai
மதுரை: பயணிகள் ரயில்களை இயக்குவது உள்ளிட்ட எம்பி சு. வெங்கடேசனின் பல்வேறு கோரிக்கைகளுக்கு ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உறுதியளித்துள்ளார்.
மதுரை கோட்டத்தில் பயணிகள் ரயில்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், "கரோனா தொற்று பரவலால் மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில் இயக்கத்தையும் ரத்து செய்தது. தற்போது தொற்று நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளதால் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில்களை முழுமையாக இயக்க முன்வரவில்லை.
தற்போது எந்தப் பயணிகள் ரயில்களும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. 200 கி.மீட்டருக்கு அதிகமாக விரைவு கட்டண பயணிகள் ரயில் இயக்கப்படும் என்ற ரயில்வே வாரிய உத்தரவால் சாதாரண கட்டணங்கள் அனைத்தும் விரைவு கட்டணங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. மீண்டும் சாதாரண கட்டணத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
மதுரை நகர் பகுதியிலிருந்து மாட்டுத்தாவணி செல்ல தற்போது பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால் அதிக கட்டணம் உள்ள பேருந்துகளில் பயணம் செய்து தங்களது ஊதியத்தில் கால் பங்கை பயணத்திற்காக செலவு செய்யும் அவல நிலை உள்ளது. எனவே அனைத்து ரயில் மார்க்கங்களிலும் சாதாரண பயணிகள் கட்டண ரயில்களை மீண்டும் இயக்கவேண்டும்.
மதுரை-புனலூர் வழித்தடத்தில் இயங்கும் சாதாரண கட்டண ரயில் விரைவு கட்டண ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் சாத்தூர், கோவில்பட்டி போன்ற முக்கிய நிறுத்தங்கள் எடுக்கப்பட்டுவிட்டது. இதை முன்பு இருந்தவாறே மாற்ற வேண்டும். தற்போது இயக்கப்படும் விரைவு கட்டண ரயில்களில் குறிப்பாக விழாக்கால சிறப்பு ரயில்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுப்பெட்டிகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துதான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மட்டும் பயணம் செய்யும் பெட்டிகள் பொது பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. கரோனாவிற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் பயண சலுகைக் கட்டணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முன்பு இருந்தவாறே மாற்ற வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் " புனலூர் விரைவு ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏறுவதற்கான ஏற்பாடு செய்யப்படும். மதுரை- போடி ரயில் பாதை பணிகள் நான்கு மாதங்களில் முடிவுபெறும். அதைத் தொடர்ந்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மார்க்கத்தில் இருந்து கிளம்பும் பிற ரயில்களை இயக்குவது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்"