மதுரை முனிச்சாலையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”திமுக இளைஞரணித் தலைவரான உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவர் ஸ்டாலினும் இணைந்து கரோனா சூழலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் அரசியல் செய்துவருகிறார்கள். திமுகவில் தற்போது மூத்தத் தலைவர்களே இல்லையா? உதயநிதி ஸ்டாலின் எல்லாம் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அவர்களது குடும்பம் மட்டும் தான் அரசியல் செய்துவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கருணாநிதியின் குடும்பத்தைத் தவிர திமுகவில் உள்ள மற்றவர் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பாராட்டிவருகிறார்கள். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கரோனா விவகாரத்தில் மக்களைக் காக்க சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட நிர்வாகங்கள் என அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. கட்சியை நிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தையும், மகனும் தேவையற்ற கருத்துக்களைக் கூறிவருகிறார்கள்.