மதுரை: மதுரையின் எட்டாவது மேயராக திமுக மாமன்ற உறுப்பினர் இந்திராணி இன்று (மார்ச். 4) பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நிதியமைச்சர், 'ஆறு ஆண்டுகள் தாமதமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. முதலமைச்சர் மற்றும் திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்கள், வரலாறு காணாத வெற்றியைத் தந்துள்ளனர்.
திராவிட மாடல்
நீதிக்கட்சி காலத்திலிருந்தே திராவிட இயக்கம் அடிப்படை தத்துவம் கொள்கை சார்ந்து இயங்கி வருகிறது. சமூக நீதி, சமத்துவம் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. இதனையே சுருக்கமாக முதலமைச்சர் 'திராவிட மாடல்' என்கிறார்.
சுயமரியாதை தத்துவமே திராவிட மாடல். எவருக்கு எல்லாம் சுயமரியாதை உண்டோ, அவரிடம் சுயசிந்தனை இருக்கும். சுய சிந்தனை உள்ள நபர்களிடம் சுயநிர்ணயம் இருக்கும். அந்த சுயநிர்ணயத் தன்மையே சுய ஆட்சியை உருவாக்கும். ஆகையால் இங்கு சுயாட்சி என்பது வெறும் மாநிலம் சார்ந்த உரிமை மட்டுமல்ல. உள்ளாட்சிகளின் உரிமையையும் சார்ந்தது.
மக்கள் தங்களைத் தாங்களே சுயமேலாண்மை செய்து கொள்ளவேண்டும் என்பதே உள்ளாட்சி. இது சுயமரியாதை தத்துவத்தின் தொடர்ச்சியாகும். தேசம், மாநிலம் இவற்றுக்கு தருகின்ற முக்கியத்துவத்தைவிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதே உண்மையான ஜனநாயகம்.
முன்னுதாரணமாகத் திகழும் தமிழ்நாடு
மக்களுடைய அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாக்கடை வசதி, சாலை வசதி, சுகாதாரம் ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் மிக மிக முக்கியம். இதனைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் முழுமையான அதிகாரம் இந்திய அளவில் கிட்டவில்லை. இந்திய சராசரியை விட உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படாமல் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டது. பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதை நானே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். ஆனால், அதற்கு போதுமான கால அவகாசம் தேவை என்பதால், பழைய மறுவரையறைப்படியே இந்தத் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம்.
மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு புது ஆரம்பம் நிகழ்ந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு உள்கட்டமைப்பு வேலைவாய்ப்பு, பெருந்திட்டங்கள், கோயில் சீரமைப்பு ஆகியவற்றில் மதுரை மாநகராட்சியின் வளர்ச்சியின் முன்னேற்றத்தில் இதுவரை அடையாத நிலையை எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சிறந்த நிர்வாகிகளாக மாறுவார்கள்
மதுரையைப் பொறுத்தவரை, பல காலங்களில் திமுகவின் உருவ பிம்பம் திசைமாறி சென்றிருந்த நிலையில், கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல்களில் எந்தவித களங்கமும் இல்லாமல் முறைகளுக்குட்பட்டு நடத்தி உள்ளதால் அந்தப்பார்வை மாறியுள்ளது. இனி தொடர்ந்து அவ்வாறு இருக்கும்.
மக்களுக்குப் பணியாற்றக்கூடிய நபர்கள் அனுபவத்தோடு தான் வரவேண்டும் என்பதில்லை. மக்களோடு மக்களாக அவர்களோடு தொடர்ந்து இயங்கக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறந்த நிர்வாகியாக மாறிவிடுவார்கள். நல்ல இலக்கு, சரியானக் கொள்கை, சரியானத்திட்டம் இவை இருந்தால் போதும். அவர்கள் சிறந்த நிர்வாகிகளாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது' எனக் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது மதுரை மேயராக பொறுப்பேற்ற இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர் புதூர் பூமிநாதன், காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 101 சவரன் தங்க அங்கியில் ஜொலிக்கும் மதுரை பெண் மேயர்!!!