தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் எலும்பு வங்கி - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன் - மதுரையில் எலும்பு வங்கியை அமைச்சர் மா.சுப்ரமணியின் திறந்து வைத்தார்

அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூ.40 லட்சம் செலவில் தென் மாவட்டத்திலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட எலும்பு வங்கியை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

எலும்பு வங்கி
எலும்பு வங்கி

By

Published : Dec 21, 2021, 1:38 PM IST

Updated : Dec 21, 2021, 2:13 PM IST

மதுரை: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தென் மாவட்டத்தில் முதன் முறையாக ரூ.40 லட்சம் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் எலும்பு வங்கி திறக்கப்பட்டுள்ளது.

எலும்பு புற்றுநோய்

எலும்பு புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பேருதவியாக இந்த வங்கி திகழும். மூன்று ஆண்டுகள் வரை தானமாகப் பெறப்பட்ட எலும்புகள் பதப்படுத்தி வைக்கப்படும். மேலும், மருத்துவமனை வளாகத்தில் மூலிகைச் செடிகளைக் கொண்ட மாடித்தோட்டமும் திறக்கப்பட்டுள்ளது. அதே போன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலேயே செயற்கை கால் தயாரிக்கப்படும்.

தனி பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவத்திற்கு என தனியாக பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் அதனை திறந்து வைக்கிறார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் பழுதடைந்த கட்டடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஜனவரி 11ஆம் தேதி முதல், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்திற்கு புதிய வருமான வரம்பாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி

தமிழ்நாட்டில் தற்போது முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 84 விழுக்காடு. மதுரை மாவட்டத்தில் 77 விழுக்காடாகும். தமிழ்நாட்டில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 44 விழுக்காடு. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 55 விழுக்காடு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்த மதுரை மக்கள் தயக்கம் காட்டுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வீரமும் விவேகமும் நிறைந்த மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும். அசைவ உணவு மற்றும் மது அருந்தினால் தடுப்பூசி செலுத்தக்கூடாது என தவறான செய்தி பரப்பப்படுகிறது.இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

அனைத்து விமான நிலையங்களிலும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 98 பேருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு, 43 பேரின் மாதிரி மத்திய அரசின் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டு, ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் 8 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும் இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

மதுரை எய்ம்ஸ் தொடர்பாக பலமுறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த ஆண்டு 50 மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளோம். அவர்களுக்கு எந்தெந்த கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். தமிழ்நாட்டில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்” என்றார்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் கணேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ஒமைக்ரான் தொற்று - அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு

Last Updated : Dec 21, 2021, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details