தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊட்டி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? - நீதிபதிகள் கேள்வி - Ambulance Facility in Hills area

மதுரை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரக்கோரிய வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை
மதுரை

By

Published : Nov 19, 2020, 4:27 PM IST

மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், “கரோனா தொற்று காலத்தில் தமிழ்நாட்டில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல போதுமான அளவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. தென் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் மருத்துவக் கல்லூரி இருந்தும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக அனுப்புகிறார்கள்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டுவரும் நோயாளிகள் அரசு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காத நிலையில் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா, மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய வசதி இல்லை.

கிராமத்தில் இருந்து கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல கால்நடை ஆம்புலன்ஸ் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும்.

எனவே தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தவும், மேலும் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். பெரும்பாலான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

ஆனால் சில ஓட்டுநர்கள் இதுபோன்று செயல்படும் நிலை உள்ளது. தொடர்ந்து ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலை பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,தொடர்ந்து அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details