சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த சங்கையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில் ”எங்கள் பகுதியான கீழபசலை, மேல பசலை, சங்கமங்கலம் ஆகிய மூன்று ஊர்களில் சுமார் ஆயிரம் பேர் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில் வரும் ஆயக்கட்டு மூலமாக சுமார் ஆறாயிரத்து 500 ஏக்கர் பாசனப் பகுதியில் விவசாயம் செய்துவருகிறோம்.
இந்தப் பகுதியில் உள்ள ஆதனூர் மதகு அருகே 2019ஆம் ஆண்டு கிருஷ்ணன் என்பவர் ஒரு பாலம் கோரி விண்ணப்பித்தார். இவருக்குப் பொதுப்பணித் துறை சார்பில் விதிமுறைகளுடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அந்தப் பாலத்தின் வழியாக தற்போது விவசாய நிலங்களுக்குச் சென்றுவருகிறோம்.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காக, பாசன கால்வாயில் ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகேயே 100 மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு பாலம் அமைப்பதற்காக பொதுப்பணித் துறையிடம் அனுமதி கோரியுள்ளார்.