நெல்லை, ராதாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காவல்கிணறு (Kavalkinaru Check post Issue) விலக்குப் பகுதியில், கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் காவல் துறையினரின் சோதனைச் சாவடி, எங்கள் வீட்டுக் கட்டடத்தை ஒட்டி உள்ளது. தற்போது காவல் துறையினர் சோதனைச்சாவடியை விரிவாக்கம் செய்து கட்டடமாகக் கட்ட முயற்சி செய்து வருகின்றனர்.
அவ்வாறு அமைக்கப்பட்டால், எங்களது வீடு, கடைக்கு வாகனங்கள் வந்து செல்ல இயலாத நிலை உருவாகும். இதே நெடுஞ்சாலையில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே நெல்லை மாவட்டம், காவல்கிணறு விலக்குப் பகுதியில், தனி நபரின் வீட்டிற்கு முன்பாக காவல் துறையினர் சோதனைச்சாவடி கட்டடம் கட்டுவதற்கு தடை விதித்தும், சோதனைச் சாவடியை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.