மதுரை: ஒன்றிய அரசு அமைத்திருந்த பண்பாட்டு ஆய்வுக்குழு தற்போது மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ' 12,000 ஆண்டு கால இந்தியப் பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு பற்றி, நான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும், குடியரசுத் தலைவருக்கு தரப்பட்டது.
பதினாறு பேர் கொண்ட அக்குழுவில் தென் இந்தியர், வடகிழக்கு இந்தியர், சிறுபான்மையினர், தலித், பெண், தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழி ஆய்வாளர் எவருமில்லை.
விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர வேறு மொழி இல்லையா? என்ற கேள்விகளை நான் எழுப்பி இருந்தேன். அந்த குழுவைக் கலைக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கூட்டுக் கடிதத்தில் கோரி இருந்தோம்.