மதுரை:உலகப்புகழ் வாய்ந்த மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (ஆகஸ்ட் 5) ஆவணி மூலத்திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின்போது மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நிகழ்த்தி, மதுரையின் ஆட்சிப்பொறுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், ஆவணி மூலத்திருவிழாவின்போது மீனாட்சியிடம் இருந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பு சிவபெருமானுக்கு வருவதாக ஐதீகம்.
அதனடிப்படையில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா காலை 10.45 மணிக்கு மேல் 11.20-க்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிகள்
இத்திருவிழா ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை 15 நாள்கள் உள்திருவிழாவாக நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வுகளான,
- மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் சிவபெருமான் விறகு விற்றது,
- நரிகளை பரிகள் ஆக்கியது,
- மாணிக்கம் விற்றது,
- நாரைக்கு மோட்சம் வழங்கியது,
- பிட்டுக்கு மண் சுமந்த லீலை
போன்ற 10 திருவிளையாடல்களின் லீலைகள் வெகுவிமர்சையாக நடைபெறும்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணித் திருவிழாவின்போது நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உள் பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்வுகள் நடைபெறும்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ஆவணி மூலத்திருவிழாவின் திருவிளையாடல் லீலைகள், வீதி உலாக்கள் கோயிலின் உள்புற ஆடி வீதியில் நடைபெறும் எனவும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தேவாலய இடத்தில் பிள்ளையார் சிலை... இரு தரப்பினருடைய ஏற்பட்ட மோதலால் பரபரப்பு!'